January 19, 2011

ச ரி க ம படுத்தாத நீ

ஆனா ஆவண்ணா படிக்கத் தெரியாதவனிடம் பின்நவீனத்துவ கவிதை ஒன்றைக் கொடுத்து, படித்துப் பார்த்து சிலாகிக்க சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை? அதற்கொப்பான கொடுமை ஒன்று எனக்கு நேர்ந்தது. அதற்கு முழுமுதற்காரணம் என் அம்மாதான். ஏதோவொரு மார்கழி வெள்ளிக்கிழமையில் வீட்டுக் காலிங்பெல் அடிக்கவும் கதைவைத் திறந்தால் வாசல் முழுக்க மோகனா மாமி அடைத்திருந்தாள். மாமி உள்ளே வருவதைப் பார்க்கும் ஆவலில் தலையைத் திருப்பாமல் குரலை மட்டும் சமையல்கட்டிற்கு அனுப்பினேன். “அம்மா மோகனா மாமி வந்திருக்கா பாரு. என்ன மாமி பட்டுப் புடவை, வைரமூக்குத்தின்னு மின்றேள். ஏதாவது ரிசப்ஷனா?” என்றேன். ”என்னடி இப்படி எண்ணைய் வழிஞ்சிண்டு நிக்கற. கிளம்பலையா இன்னும்? நாழியாயிடுத்துல்ல?” என்றாள் மாமி. ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்க அம்மா வந்து “போரடிக்கறதுன்னு சொல்லிண்டிருந்தல்ல. அதான் மாமி உன்னை இன்னைக்கு மியூசிக் அகாடமிக்கு அழைச்சிண்டு போக வந்திருக்கா” என்றாள். இன்னும் ரெண்டு செகண்ட் அம்மாவை முறைத்திருந்தேனென்றால் அம்மா சாம்பாலாகியிருப்பால். போரடிக்குதுன்னு சொன்ன பொண்ணை ஒரு மிகப்பெரிய வைக்கப் போரோடு கோர்த்து விட்டு அக்கப் போர் பண்ணிட்டியேம்மா என மனதுக்குள் அழுதுக்கொண்டே கிளம்பினேன். போதாக்குறைக்கு மாமியை எதிர்த்துப் பேசக்கூடாது, கெக்கே பிக்கேன்னு கமெண்ட் அடிக்கக்கூடாதுன்னு ஏகப்பட்ட அட்வைஸ். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு நாள் வாங்கிக் கட்டிக்கப்போறே என நினைத்துக் கொண்டே மாமியோடு ஆட்டோவில் கிளம்பினேன்.

மியூசிக் அகாடமி போவதற்குள் மாமியைப் பற்றி எனக்குத் தெரிந்ததை சொல்லிவிடுகிறேன். மாமிக்கு கும்பகோணம் பக்கம். தனக்கு எல்லாம் தெரியுமென்பதில் மாமிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதே நம்பிக்கை எனக்குமுண்டு. மாமிக்கு ஒன்னுமே தெரியாதென்பதில். இரண்டு பையன்களும் கல்யாணமாகி அமெரிக்காவிலிருக்கிறார்கள். மூத்த மாட்டுப்பெண் பிள்ளையாண்டிருப்பதால் இன்னும் ஆறு மாதங்களில் மாமி அமெரிக்காப் போகப் போவதாக அம்மா சொன்னாள்.

”அப்புறம் வேலையெல்லாம் எப்படிப் போறது” என ஆரம்பித்தாள் மாமி.
”போறது மாமி. As usual"
"ஸ்விஸ்லன்னா வேலைப் பார்க்கிற?”
“ஆமா மாமி”
“ப்ராபர் ஸ்விஸா” என்றாளே பார்க்கனும். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. மாமி கத்துகிட்ட ஆங்கில வார்த்தைகளில் ப்ராபரும் உண்டு. கிராமம், டவுன், மாவட்டம், மாநிலம் தாண்டி இப்போ நாட்டுக்கும் ”ப்ராபர்” போட ஆரம்பித்துவிட்டாள். அடுத்த என்ன அபத்தமான கேள்வி வருமோ என பயந்துண்டுருக்கும்போது நல்லவேளையாக மியூசிக் அகாடமி வந்துவிட்டது. ஆட்டோவிற்கு காசைக் குடுத்துவிட்டு திரும்பிய எனக்கு பாட்டுப் ப்ரோகிராமிற்கு வந்திருக்கோமா இல்லை பட்டுப் புடவை ப்ரோகிராமிற்கு வந்திருக்கோமா என்ற பெரிய சந்தேகம் வந்தது. அந்தளவுக்கு கூடியிருந்த மொத்த ஜனமும் ஆர்.எம்.கேவியில் கொள்ளை அடித்துவிட்டு வந்தாற்போலிருந்தது. இறங்கியவுடனே மாமி பட்டுப் பாட்டை ஆரம்பித்தாள். பார்க்கிற அத்தனை பேரிடமும் “ராமர் பச்சைதான் வேணும்ன்னு தேடித் தேடி வாங்கினதாக்கும். சுத்த ஜரி. எவ்ளோ கெணம்மா இருக்குப் பாருங்கோ” எனப் பாடிக்கொண்டிருந்தாள். ஒரு பெரிய அரை வட்ட மாநாடு நடந்துக்கொண்டிருக்க, வேண்டாவெறுப்பாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீர்ன்னு யாரோ என் காதைப் பிடித்து இழுக்கவும் பயந்துட்டேன். ஐந்துக்கு மூன்றில் ஒரு மாமி என் காதை ஸ்கேன் பண்ணிக்கொண்டிருந்தாள். பெரிய ப்ரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகு என் காதை மாமியின் கையிலிருந்து விடுவித்துக்கொண்டேன். எத்தனை கேரட் என்று ஒலித்த மாமியின் குரல் வெண்கலப் பாத்திரக் கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது. தெரியாது மாமியென்றேன்.

”மோகனாக்கு என்ன வேணும்”
“தெரியலையே மாமி. அநேகமா கச்சேரி முடிச்சுட்டு தான் சாப்பிடுவான்னு நினைக்கிறேன்”
“அசடே. மோகனாக்கு நீ என்ன உறவு வேணும்ன்னு கேட்டேன்” என்றாள். அந்தக் கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் தெரிஞ்சிட்டா சிவில் சர்வீஸ் எக்ஸாமெல்லாம் ஊதி தள்ளிட மாட்டேனா என நினைத்துக்கொண்டேன். மோகனா மாமி எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். அநேகமாக எனக்குத் தெரிந்த எல்லோருக்கும். அதற்குள் மாமியே வந்துவிட்டாள். நம்ம லெட்சுமி பொண்ணுடி எனச் சொல்லிக்கொண்டே என்னை அடுத்த மாநாடு நடக்குமிடத்திற்கு தள்ளிகொண்டு போனாள். நேற்றைக்கு நீ எஸ்.ஆர் கச்சேரி கேட்டிருக்கனுமே. என்னமா பாடினான் தெரியுமா என ஆரம்பித்து மாமிகளனைவரும் தத்தம் புலமைகளைக் காட்டிக்கொண்டிருந்தனர். தீடிரென ஒரு மாமி பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்தாள். முடியாதவா போலிருக்கு, என்னமோ ஏதோ என பதறி மாமியைத் தாங்கிப் பிடிக்க ஓடுகையில் சட்டென ஓலம் நின்றது. போயேச் சேர்ந்துட்டாளா என யோசித்துக்கொண்டிருக்கும்போதே இதே ஆலாபனை கரகரப்பிரியாவில் எப்படியிருக்கும் என்றாள் என்னைப் பார்த்து. ”கண்றாவியா இருக்கும். ஸ்டெர்ப்சில்ஸ் சாப்பிட்டா சரியாப் போய்டுமென்றேன்” கடுப்பாய். கொல்லென்று சிரித்தது சுத்தி நின்றக் கூட்டம். மோகனா மாமிதான் என் சங்கீத ஞானத்தை எக்ஸ்ட்ரா பிட்டுகள் சேர்த்து படமாய் ஓட்டிக்கொண்டிருந்தாள். ”சின்ன வயசுலப் பாட்டுக் கத்துக்க போனா. கீர்த்தனை கத்துக்கிற நேரத்துல பாட்டு டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி வேற எடத்துக்கு மாறிட்டா. பாட்டு டீச்சர்ன்னு இல்ல. இவ யார்ட்ட பாடம் கத்துக்கப் போனாலும் அவாளுக்கு கல்யாணமாயிடறது. ஹிந்தி, பரதம் என எல்லா டீச்சரும் கல்யாணமாகிப் போய்டவே குழந்தைக்கு கலை மேலிருந்து ஆர்வமே போய்டுத்து. ஆனாப் பாருங்கோ சினிமாப் பாட்டெல்லம் அட்சர சுத்தமா ஸ்ருதி பிசகாமல் பாடுவா.” என ஒரு ஃபில்டர் காஃபிக்கு மயங்கி என் அம்மா சொன்ன சங்கதிகளை மாமி வாசித்துக்கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் ஹால் கதவுகள் திறக்கப்பட்டது. நான்கு பேரின் காலை மிதித்து, நாற்பது சாரி சொல்லி மாமி அமர்ந்தாள். பக்கத்திலேயே நான். கச்சேரி பண்ண வேண்டிய ஆர்.எஸ்ஸும் பப்பளா பளபளாவென்றிருந்தாள். ஆர்.எஸ் பாடப் பாட எனக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றிகொண்டு வந்தது. தலை தொங்கும் தருணத்தில் ஆர்.எஸ்ஸின் ஆஆஆஅ எழுப்பிவிட்டுவிடும். நடுவில் ஆர்வ மிகுதியில் மாமி ஓங்கி என் தொடையில் தட்டிவிட்டாள். ஊர்பக்கம் அள்ளி அள்ளி சாப்பாடு போடுபவர்களுக்கு பெரிய கை என்பார்கள். மாமியையும் அப்படித்தான் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் இன்றுதான் மாமிக்கு நிஜமாகவே பெரிய கை என்றுணர்ந்தேன். அவ்வப்போது மாமி பாஸ் பண்ணும் கமெண்ட்டுகளுக்கு பதில் வேறு சொல்லனும். அப்படித்தான் தீடிரென ”சுத்ததன்யாசி ஜோரா இருக்குல்ல” என்றாள். நானும் தூக்கக் கலக்கத்தில் “எங்க மாமி இப்பல்லாம் உண்மையான சந்நியாசிகளைப் பார்க்க முடிகிறது. அதெல்லாம் மகாப் பெரியவரோட காலத்தோட சரி” என்று உளறிவைத்தேன். “கடவுளே இப்படி ஒரு ஞான சூன்யத்தோட என்னை கச்சேரி பார்க்க வச்சிட்டியே” என மாமி புலம்புவது போல் எனக்கு கேட்டது. உடனே எனக்கு ரோஷம் வந்துவிட்டது. அடுத்து ஆர்.எஸ் பாடிய பாடலை சிந்துபைரவி ராகம்தானே மாமி என்றதுக்கு, ஆர்.எஸ்ஸின் மீது வைத்தக் கண்ணை எடுக்காமலே “மத்யமாவதி” என்றாள். என் காதில் மத்யமாவது என விழுந்து தொலைக்கவே “நன்னா இருட்டிடுத்து. இப்பப் போய் மதியமாறதுங்றேளே மாமி” என்றேன். மாமிக்கு ரொம்ப எரிச்சலாகிவிட்டது. இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். இதைப் போல முழுக் கச்சேரியிலும் என் அறிவாளித்தனத்தை பறைசாற்றிக்கொண்டே இருந்தேன். இனி ஜென்மத்துக்கும் என்னை அழைத்துக்கொண்டு எந்தக் கச்சேரிக்கும் போகமாட்டாள் என்ற சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும், ஊரெங்கும் என் பேரை ரிப்பேர் ஆக்கிடுவாளே என்ற கவலையும் குடிகொண்டது. இந்த இரண்டு மாத விடுப்பில் சங்கீதம் கத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு ஸ்விஸ்ஸில் ஒரு கச்சேரிப் பண்ணாலென்ன எனத் தோன்றியது. வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாய் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சங்கீதம் கத்துக்கொடுக்க ஆளிருக்கா எனத் தேடனும் என்று நினைத்துக்கொண்டேன்.

தோழிகளிடம் என் முடிவை சொன்னதும் சிரித்தார்கள். ரெண்டே மாசத்தில் எப்படிடி என்று கிண்டலடித்தார்கள். ”கத்துண்டு நான் பாடப்போறது ஸ்விசிலாக்கும். அதனால நான் பாடறது தான் கர்நாடிக சங்கீதம்” என்றேன். பின்னர் அம்மா வீடு இருக்கும் ஏரியாவிலேயே ஒருத்தர் சொல்லிக்கொடுக்கிறார் எனக் கேள்விப்பட்டவுடனேயே அந்த அட்ரஸில் இருந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்திக்கொண்டிருந்தேன். கதவைத் திறந்தவர் நிறை மாத கர்ப்பிணியாய் இருந்தார். நான் தயங்கி பாட்டுக் கத்துக்கனும்ன்னு இழுத்ததும், உள்ளே அழைத்துக்கொண்டு போய் காஃபியெல்லாம் கொடுத்து உபசரித்தார். பின்னர் தனக்கு அடுத்த மாதம் டெலிவரியென்றும், வேண்டுமென்றால் தன் மாமியாரிடம் கற்றுக்கொள்ளலாமென்றும் சொல்லி தன் மாமியாரின் அட்ரஸை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். எந்த ஏரியா என்று பார்க்க அந்தக் காகிதத்தைப் பிரித்த போது முதலில் பெயரைத் தான் பார்த்தேன். மிசஸ். மோகனா என்றிருந்தது. மேற்கொண்டு படிக்காமலேயே அந்தக் காகிதத்தை கசக்கி கீழேப் போட்டு வீட்டை நோக்கி விறுவிறுவென நடந்தேன்.

-அதீதம் (15-01-2011) இதழில் வெளியானது.

23 comments:

Porkodi (பொற்கொடி) said...

wow! your story got published?? congrats!!!! :D

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா கொஞ்சம் பத்தி பிரிச்சு எழுதக் கூடாதா? படிச்ச வரியை திருப்பி திருப்பி படிக்கறேனே! :(

Porkodi (பொற்கொடி) said...

சூப்பர் சூப்பர்! நான் ரெண்டுங்கெட்டான் வயசு குட்டிப்பொண்ணா இருந்த போது அம்மா இழுத்துட்டு போன கச்சேரில எல்லாம் இப்படி தான் என்னோட‌ அறிவையும் களங்கமில்லா மனசையும் (அதான் உடனே தூங்கிடறது..) பறை சாற்றியிருக்கேன்! :D

முடிவு என்னவா இருக்கும்னு எல்லாம் யோசிக்காம கடி ஜோக்ஸ் ரசிச்சு சிரிச்சுட்டே படிச்சேன்! நல்ல ஹாஸ்யமான நடை இருக்கு! சில ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு.. அப்புறம் கச்சேரி எப்படி பார்க்க முடியும்?! ;) எந்த கம்பெனில 2 மாசம் லீவ் தர்றான், ஒரு வேளை டீச்சர் வேலை பார்க்கறாளோ?

Chitra said...

தலைப்பே கலக்கல்.... அப்போ கதை இல்லையா என்று கேட்காதீங்க,..... ஹா,ஹா,ஹா,....

...Congratulations!!

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர்ப்பா..

'பரிவை' சே.குமார் said...

நல்லா இருக்குங்க... அருமையான நடை.

pudugaithendral said...

கதை மாதிரி ஆனா கதை இல்லை. சரியா வித்யா??

ரசிச்சேன்

mvalarpirai said...

kalakal comedy ! "mathiyamavathu"...ha ha ..:)

தக்குடு said...

பரவாயில்லை இந்த தடவை நீங்க படிக்கனும்னு நினைச்சதுக்கே அந்த டீச்சர் கல்யாணம் எல்லாம் தாண்டி கர்ப்பமே ஆயாச்சு போலருக்கு!!..:PP

RVS said...

//மாமிக்கு கும்பகோணம் பக்கம். தனக்கு எல்லாம் தெரியுமென்பதில் மாமிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.// இதை வன்மையாக ஒரு கும்பகோணம் பக்கத்துக்காரன் என்ற வகையில் கண்டிக்கிறேன். "தனக்கு இசையில்" என்று சேர்த்திருக்கலாம்... ஹி..ஹி.. ;-)
சிறுகதை அட்டகாசம்.. இன்னும் ரெண்டு ராகப் பெயர்களை வைத்து ராகக்கும்மி அடித்திருக்கலாம். மொழிவளம் அருமை!! ;-)

புனைவு அப்படின்னு போட்டதால இத்தோட நிறுத்திக்கிறேன்.. ;-)

CS. Mohan Kumar said...

Nice. Congrats

DINESH said...

“எங்க மாமி இப்பல்லாம் உண்மையான சந்நியாசிகளைப் பார்க்க முடிகிறது. அதெல்லாம் மகாப் பெரியவரோட காலத்தோட சரி”

gud comedy...actually before readin dis post,i feel sad due 2 some prob in my home..but from starting to end,sirichitey irunthan....now am feelin better vidya...thanks

விக்னேஷ்வரி said...

செம ரைட்டப் வித்யா.

"உழவன்" "Uzhavan" said...

// இன்னும் ரெண்டு செகண்ட் அம்மாவை முறைத்திருந்தேனென்றால் அம்மா சாம்பாலாகியிருப்பால்//
இந்த வரி ரொம்ப நல்லாருக்கு :-)

Anonymous said...

கலக்கல்! செமத்தியான நடை!
//நன்னா இருட்டிடுத்து. இப்பப் போய் மதியமாறதுங்றேளே மாமி //
ஹா ஹா! :)

Vidhya Chandrasekaran said...

நன்றி பொற்கொடி.
நன்றி சித்ரா.
நன்றி அமுதா.
நன்றி குமார்.
நன்றி சமுத்ரா.
நன்றி கலா அக்கா.

Vidhya Chandrasekaran said...

நன்றி வளர்பிறை.
நன்றி தக்குடு.
நன்றி RVS.
நன்றி மோகன் குமார்.
நன்றி தினேஷ்.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி உழவன்.
நன்றி பாலாஜி.

Thamira said...

வழக்கமான உங்கள் நகைச்சுவைப் பகிர்வைப் போலவே துவங்கி முடிவில் கதையாக்கிவிட்டீர்கள். நன்றாகயிருந்தது.

பெசொவி said...

// இந்த இரண்டு மாத விடுப்பில் சங்கீதம் கத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு ஸ்விஸ்ஸில் ஒரு கச்சேரிப் பண்ணாலென்ன எனத் தோன்றியது. //

"ப்ராப்பர்" சுவிஸ்சில், "ப்ராப்பர்" சங்கத்தில், "ப்ராப்பர்" அரங்கத்தில் "ப்ராப்பர்" கர்நாடக சங்கீதம் பாட "ப்ராப்பர்" வாழ்த்துகள்!

Simulation said...

ROFL
சுத்த தன்யாசி பற்றி இங்கே

http://simulationpadaippugal.blogspot.com/2011/01/08.html
//எங்க மாமி இப்பல்லாம் உண்மையான சந்நியாசிகளைப் பார்க்க முடிகிறது. அதெல்லாம் மகாப் பெரியவரோட காலத்தோட சரி//

நானானி said...

சிரிச்சேன்...சிரிச்சேன்...சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.
சுத்த தன்யாசி...டாப்!!!

Unknown said...

நல்லா இருக்குங்க... அருமையான நடை.

சாந்தி மாரியப்பன் said...

அதீதத்திலயே வாசிச்சிட்டேன்.. செம கலக்கல் போங்கோ :-))))))